மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - கனிமொழி எம்.பி. பேச்சு


மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2020 10:45 PM GMT (Updated: 12 Jan 2020 5:47 PM GMT)

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, சமுதாய நலக்கூட கட்டிடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சமுதாய நலக்கூட கட்டிடம் வருவதற்கு காரணமாக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தான். அவர் தான் என்னிடம் இந்த பகுதி மக்களுக்கு சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். உங்கள் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டுள்ளது. இதுபோல் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முயற்சியில் எனது நிதியில் இருந்து பூச்சிக்காடு, மெஞ்ஞானபுரம், கிறிஸ்தியாநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி மீனவர்கள் மீன்பிடி வலைக்கூடம் பழுதடைந்துள்ளதாக கூறி புதுப்பித்து தருமாறு கேட்டுள்ளார்கள். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுத்து கட்டித்தருவேன். மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் மக்களின் அனைத்து குறைகளையும் சரிசெய்து தருவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை அமைப்பளர் உமரிசங்கர், தொண்டரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், அமலிநகர் ஊர்நல கமிட்டி தலைவர் எமிலிட் பர்னாந்து, துணைத்தலைவர் சந்திரன், பொருளாளர் ஜெனிஸ்டன், முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story