மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் குழந்தைகள் உள்பட 3 பேர் பலி தோகைமலை அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் குழந்தைகள் உள்பட 3 பேர் பலி தோகைமலை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 13 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தோகைமலை,

திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). மெக்கானிக்கான இவர் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் தொழிலிலும் செய்து வந்தார். இவரது மனைவி மீனா (30). இவர்களது வீட்டின் அருகே மீனாவின் அக்காள் அமராவதி தனது கணவர் மணிவேல் மற்றும் குழந்தைகள் கனிஷ்கா (4), தருண் (1½) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று சீனிவாசன் தனது மோட்டார் சைக்கிளில் மீனா மற்றும் கனிஷ்கா, தருண் ஆகியோரை அழைத்து கொண்டு கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாமக்காப்பட்டி கிராமத்தில் உள்ள மீனாவின் பெற்றோரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, தோகைமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலவெளியூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து திருச்சி சோமரசம்பேட்டை நோக்கி அதிவேகமாக வந்த ஒரு கார் சீனிவாசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

இதில் குழந்தைகள் கனிஷ்கா, தருண் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சீனிவாசன், மீனா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் பதற்றம் அடைந்த கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சீனிவாசன், மீனா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தைகள் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசனும் பரிதாபமாக இறந்தார். பின்னர் சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதையடுத்து மீனா மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்தால் தோகைமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.


Next Story