சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்


சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2020 4:45 AM IST (Updated: 13 Jan 2020 1:23 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருப்பூர்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்மனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகள் நிவேதா (வயது 23). இவர் சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி தாவர வியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதா பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார். நேற்று முன்தினம் மின் விசிறியில் துப்பட்டாவால் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

மாணவி நிவேதா விடுதியில் கடந்த 10-ந் தேதி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தான் மாணவிகள் வார்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே விடுதியில் மாணவியுடன் தங்கி இருந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக கள ஆய்வுக்கு சென்று விட்டனர். இதனால் நிவேதா மட்டும் விடுதியில் தனியாக இருந்துள்ளார். மாணவி பயன்படுத்திய டைரி, 3 பக்க காதல் கடிதம் மற்றும் செல்போன் கைப்பற்றப் பட்டுள்ளது.

ஒருதலை காதல்

மாணவி ஒருதலைப்பட்சமாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் மாணவியின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் நிவேதா கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக தான் மாணவி விடுதியில் தனியாக இருந்த நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் மாணவியின் செல்போனில் பதிவாகி உள்ள எண்களை ஆய்வு செய்து, அவர் யார், யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். விசாரணை முடிந்தால் தான் மாணவி தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் மாணவி எழுதிய காதல் கடிதத்தில் என்ன எழுதப் பட்டிருந்தது என்பதை கூற போலீசார் மறுத்துவிட்டனர்.

Next Story