முத்தியால்பேட்டையில் பயங்கரம் வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயம்


முத்தியால்பேட்டையில் பயங்கரம் வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:15 PM GMT (Updated: 12 Jan 2020 9:19 PM GMT)

முத்தியால்பேட்டையில் வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளி செல்வம் (வயது 50). வாய்பேச முடியாத இவர் கோட்டக்குப்பம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் குப்பைகளை சேகரித்து அதில் இருக்கும் இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று காலை முத்தியால்பேட்டை பகுதியில் குப்பைகளை சாக்கு மூட்டையில் சேகரித்தார். அதை அவர் பெருமாள் கோவில் வீதி- காட்டமணிக்குப்பம் வீதி சந்திப்பில் கொட்டி அவற்றை தனித்தனியாக பிரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் வைத்திருந்த குப்பையில் சிறிய அட்டைப்பெட்டி மூடப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் நாட்டு வெடிகுண்டு இருந்தது. ஆனால் அவருக்கு அது வெடிகுண்டு என தெரியாது என்பதால் அதை பிரித்து பார்க்க முயன்றார். அப்போது அது டமார் என்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் செல்வத்தின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு விரல்கள் துண்டாகின. ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள பழைய இரும்புக்கடைக்கு ஓடி வந்தார். ஆனால் வழியிலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.

மூதாட்டி காயம்

வெடிகுண்டு வெடித்ததில் சிதறிய கூழாங்கற்கள் அந்த வழியாக நடந்து சென்ற அன்னபூரணி (64) என்ற மூதாட்டியின் மீதும் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் அந்த வழியாக சென்றவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அந்த பகுதியில் வசித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். குண்டு வெடித்ததில் கை விரல்கள் சேதமடைந்து மயங்கி கிடந்த செல்வத்தை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. குண்டு வெடித்த குப்பைத் தொட்டி பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். அந்த இடத்தில் மேலும் குண்டுகள் இருக்கிறதா? என தொடர்ந்து போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. அந்த இடத்தில் கிடந்த கூழாங்கற்கள், நூல் சிதறல்கள், பிளாஸ்டிக் பைகளை போலீசார் சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் ஆகியோரும் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வையாபுரி மணிகண்டனும் வந்து அப்பகுதி மக்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.

குடியிருப்பு பகுதி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அன்பு ரஜினி தற்போது வெடிகுண்டு வெடித்த இடத்தின் அருகில் தான் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீடும் அருகில்தான் உள்ளது.

ஏற்கனவே வெடிகுண்டுகள் வீசி எதிரிகளை நிலைகுலையச் செய்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யும் சம்பவங்கள் தலைதூக்கி உள்ளன. இந்தநிலையில் தற்போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியிலேயே வெடிகுண்டு வெடித்து தொழிலாளி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story