பருத்தி அறுவடை கருவி பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
பருத்து அறுவடை கருவி பயன்படுத்துவது குறித்து பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தில் நடந்தது.
திருப்பத்தூர்,
வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கி, பேசுகையில், பருத்தி அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக பருத்தி அறுவடை செய்யும் கருவி தற்போது வேளாண்மை துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இக்கருவி மின்கலன் மூலம் இயக்கக்கூடியது. எளிதில் கையில் இயக்க கூடிய இந்த கருவியால் பருத்தி விவசாயிகள் ஒரு நபர் எடுக்கும் பருத்தி அளவைவிட 6 மடங்கு இலை, சருகு இல்லாமல் எடுக்க முடியும். தானியங்கி பருத்தி சேகரிக்கும் பை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பருத்தி எளிதாக மாசுபடாது. பருத்தி எடுக்கும் கூலி 70 சதவீதம் வரை குறைகிறது. எல்லாவித ரக பருத்திகளையும் எடுக்க உகந்தது. பராமரிப்பு செலவு குறைவு’ என்றார்.
நிகழ்ச்சியில் கருவியை கையாளும் விதம் குறித்து செயல்முறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஜே.சி.ராகினி, வேளாண்மை அலுவலர் ஜே.ஜெயசுதா, துணை வேளாண்மை அலுவலர் உதயகுமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.