வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் ; முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டம்
வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அமித்ஷாவின் அனுமதி கிடைத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்று விவாதிப்பேன் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு இருந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதைதொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் மூலம் காலியான 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் 11 பேர் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். முதல்-மந்திரி எடியூரப்பா, இடைத்தேர்தல் முடிந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்றும், அதில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.
இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் நடைபெறவில்லை. 11 பேருக்கும் மந்திரி பதவி வழங்க எடியூரப்பா திட்டமிட்டு உள்ளார். ஆனால் பா.ஜனதா மேலிடமோ 8 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது.
இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு, முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்ல முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவருக்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இந்த மாதத்தின் இறுதியில் எடியூரப்பா சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தார். மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற வேண்டி இருப்பதால், அந்த பயணத்தை அனேகமாக ரத்து செய்வதாக கூறியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த உள்துறை மந்திரி அமித்ஷா, சுவிட்சர்லாந்து பயணத்தை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துவிட்டார். இதையடுத்து எடியூரப்பா தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு முன்பு மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபையை விரிவுபடுத்துவேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தாமதமாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. அது தவறு. தன்னை நேரில் சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா எனக்கு இன்று (அதாவது நேற்று) நேரம் ஒதுக்கினார். ஆனால் ராய்ச்சூரில் முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருப்பதால், நான் டெல்லி செல்லவில்லை. அமித்ஷாவின் அனுமதி கிடைத்தால் நாளை (இன்று) அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு டெல்லி சென்று அவரை சந்திப்பேன். கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி பெறுவேன். இதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஒருவேளை அதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டால், அவரே வருகிற 17 மற்றும் 18-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அப்போது அவருடன் பேசி மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெறுவேன். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும். இந்த விஷயத்தில் அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் சுற்றுப்பயண திட்டத்தை திட்டமிட்டிருந்ததை ரத்து செய்ய ஆலோசித்தேன். ஆனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். என்னை மத்திய அரசு அனுப்புகிறது. அதனால் அங்கு செல்ல வேண்டும். அதனால் செல்கிறேன். அதனால் திட்டமிட்டப்படி தாவோஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது உறுதி. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 20-ந்தேதி சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாகவும், எனவே இ்ன்னும் ஒரு வாரத்திற்குள் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story