பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் பயங்கரம்: 150 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் பயங்கரம்: 150 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2020 4:15 AM IST (Updated: 13 Jan 2020 10:08 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் 150 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.

பேரணாம்பட்டு, 

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஒஸ்கோட்டாவிலிருந்து சென்னைக்கு மைதாமாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரி புறப்பட்டது. அதனை விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அருகே உள்ள எதப்பட்டைச் சேர்ந்த டிரைவர் பஷீர்அகமது (வயது 43) ஓட்டிவந்தார்.

அந்த லாரி கர்நாடக மாநில எல்லையை கடந்து நள்ளிரவு வேலூர் மாவட்டம் பத்தலப்பல்லி மலைப்பாதைக்குள் வந்தது. குண்டத்துகானாரு என்ற இடத்தில் மலைப்பாதையில் வளைவான இடத்தில் வந்தபோது எதிரே வாகனம் வந்ததை பார்த்த டிரைவர் பஷீர்அகமது லேசாக திருப்ப முயன்றுள்ளார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் அந்த லாரி மலைப்பாதையின் இடதுபுற தடுப்புச்சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் அந்தரத்தில் பறந்தவாறு 150 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் கன்டெய்னர் தனியாக கழன்று சுக்குநூறாகி நொறுங்கியது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் பஷீர்அகமது இடி பாடுகளில் சிக்கி பாரிதாபமாக அந்த இடத்திலேயே இறந்தார். நள்ளிரவு நடந்ததால் இந்த விபத்தை யாரும் கவனிக்கவில்லை. நேற்று காலை அந்த வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு வாகனத்தில் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக பேரணாம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பத்தலப்பல்லி கிராமமக்கள் உதவியுடன் 150 அடி பள்ளத்துக்குள் இறங்கி பஷீர்அகமதின் உடலை கயிறு கட்டி போராடி மீட்டனர். பின்னர் அவரது உடல் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. தமிழக பகுதிக்குள் வாகனங்கள் நுழையும்போது 30 அடி உயரத்தில் செங்குத்தான மலை முகடு இருப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் டிரைவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் உள்ளே நுழையும் வாகனங்கள் எதிரே திடீரென வாகனங்கள் வருவதை பார்த்ததும் திருப்ப முயலும்போது அவை தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்கின்றன.

இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்புகளும் அதிக அளவில் நடந்துள்ளன. கனரக வாகனங்கள் பாரம் அதிகமாக ஏற்றி வரும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து தொடர்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் உடனடியாக இந்த மலை முகடை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story