சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் பரிதாபம்: பொக்லைன் எந்திரத்துடன் மண்ணுக்குள் புதைந்த ஆபரேட்டர் பலி


சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் பரிதாபம்: பொக்லைன் எந்திரத்துடன் மண்ணுக்குள் புதைந்த ஆபரேட்டர் பலி
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 6:21 PM GMT)

செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் பொக்லைன் எந்திரத்துடன் மண்ணுக்குள் புதைந்த ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார்.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளது. இங்கு திருமானூர் அருகே உள்ள பெரிய பட்டாக்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பையன் மகன் வினோன்மணி (வயது 24) என்பவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வினோன்மணி சுரங்கத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சுண்ணாம்புக்கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, பக்கவாட்டில் இருந்த மண் திடீரென்று சரிந்தது. இதில் பொக்லைன் எந்திரத்துடன் வினோன்மணியை மண் மூடியது. இதை அறிந்த மற்ற தொழிலாளர்கள், மற்றொரு பொக்லைன் எந்திரத்துடன் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிலமணிநேர போராட்டத்துக்கு பின் மண்ணுக்குள் புதைந்த பொக்லைன் எந்திரத்தையும், வினோன்மணியையும் மீட்டனர்.

இதையடுத்து வினோன்மணியை சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்குவந்து வினோன்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story