மறைமுக தேர்தலில் வாக்களிக்க வந்தபோது தி.மு.க.வினர் கடத்திச்சென்று கொடுமைப்படுத்தினர் - காங்கிரஸ் பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்


மறைமுக தேர்தலில் வாக்களிக்க வந்தபோது தி.மு.க.வினர் கடத்திச்சென்று கொடுமைப்படுத்தினர் - காங்கிரஸ் பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:00 PM GMT (Updated: 13 Jan 2020 6:35 PM GMT)

மறைமுக தேர்தலில் வாக்களிக்க வந்தபோது, தி.மு.க.வினர் கடத்திச்சென்று கொடுமைப்படுத்தியதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களிலும், தி.மு.க. 10 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இதனால் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. எளிதில் கைப்பற்றும் என கூறப்பட்டது. ஆனால் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்விற்கான மறைமுக தேர்தலில் வாக்களிக்க வந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஜெயம் தங்கவேல் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தவுடன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் அவர் மறைமுக தேர்தலில் வாக்களிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்களித்த 19 பேரில், ஒரு வாக்கு செல்லாதது ஆனதால், அ.தி.மு.க., தி.மு.க. தலா 9 வாக்குகள் பெற்று சமநிலை பெற்றன. இதையடுத்து குலுக்கல் முறையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ராமசாமி ஒன்றியக்குழுத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை தலைவருக்கான தேர்தலில், வாக்களிக்க போதுமான கவுன்சிலர்கள் வராததால் துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமசாமி, நேற்று ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஜெயம் தங்கவேல் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். அவர் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமியிடம், தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தன்னை, தி.மு.க.வினர் கடத்திச்சென்று விட்டதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஜெயம் தங்கவேல் அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு, தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சென்று புகார் அளித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்ற என்னை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச்சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். மறைமுக தேர்தலில் வாக்களிக்க வந்தபோது நான் மயக்கம் அடைந்ததால், தி.மு.க.வினர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகக்கூறி கடத்திச்சென்று, கொடுமைப்படுத்தினர். பின்னர் அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில் ஒரு இடத்தில் என்னை இறக்கிவிட்டு விட்டு சென்றனர், எனக்கூறினார்.

Next Story