திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவம்: வீட்டில் புதைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க நகைகள் பறிமுதல்


திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவம்: வீட்டில் புதைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Jan 2020 4:15 AM IST (Updated: 14 Jan 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில் வீட்டில் புதைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீஸ் காவல் முடிந்து பெங்களூரு சிறையில் முருகன் மீண்டும் அடைக்க அழைத்து செல்லப்பட்டார்.

திருச்சி, 

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 28 கிலோ தங்க நகைகள் கொள்ளைப்போன வழக்கில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் கர்நாடக மாநிலம் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை திருச்சி மாநகர போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் திருச்சி அருகே கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் கடந்த ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும் அவரது தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூர் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கொள்ளிடம் டோல்கேட் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து ஸ்ரீரங்கம் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மேலும் பெங்களூரு சிறையில் இருந்து முருகனை போலீசார் அழைத்து வந்து ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் கடந்த 8-ந் தேதி முதல் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு சிவகாமசுந்தரி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திருவாரூர் முருகனை கொள்ளிடம் டோல்கேட் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து முருகன் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை திருவெறும்பூர் அருகே, தான் ஏற்கனவே தங்கியிருந்த வாடகை வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து திருவாரூர் முருகனை போலீசார் அந்த இடத்திற்கு அழைத்து சென்று அங்கு புதைத்து வைத்திருந்த ஒரு கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் திருவாரூர் முருகனை நேற்று ஸ்ரீரங்கம் கோர்ட்டில் போலீசார் மீண்டும் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவரை பெங்களூரு சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர்.

Next Story