கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் இன்ஸ்பெக்டர் போல் போனில் பேசி, ஆசிரியைக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது


கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் இன்ஸ்பெக்டர் போல் போனில் பேசி, ஆசிரியைக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2020 10:45 PM GMT (Updated: 13 Jan 2020 6:35 PM GMT)

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், இன்ஸ்பெக்டர் போல் போனில் பேசி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை போத்தனூர் அருகே உள்ள சங்கமம் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 49). இவர் கோவை ராம்நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம்நகரை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருக்கு தொழில் தேவைக்காக கடன் கொடுத்து இருந்தார். பின்னர் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரதீப்பிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சம்பவத்தன்று ராஜேஸ்வரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் தன்னை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர், ‘பிரதீப்குமாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுக்கக்கூடாது. மீறி பணத்தை கேட்டால் தொலைத்துவிடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இது ராஜேஸ்வரிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்த நபர் பேசியதை ராஜேஸ்வரி தனது செல்போனில் பதிவு செய்து வைத்து இருந்தார். மேலும் அவர் இது குறித்து சி.டி. ஆதாரத்துடன் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரியை மிரட்டியது பிரதீப்குமாரின் தம்பி பிரசாந்த் கோத்தாரி(33) என்று தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் அவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இது குறித்து காட்டூர் போலீசார் சட்டப்பிரிவு 170(அரசு அதிகாரி என போலியாக கூறுவது), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய வற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் கோத்தாரியை கைது செய்தனர். அண்ணனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால்தான் ஆசிரியையை மிரட்டியதாக பிரசாந்த் கோத்தாரி கூறினார். கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story