சேலம் கோட்டையில் ரூ.5 கோடியில் பல்நோக்கு கூடம் அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


சேலம் கோட்டையில் ரூ.5 கோடியில் பல்நோக்கு கூடம் அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Jan 2020 3:45 AM IST (Updated: 14 Jan 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோட்டையில் ரூ.5¾ கோடியில் பல்நோக்கு கூடம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.

சேலம், 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.945 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அஸ்தம்பட்டி மண்டலம் 31-வது வார்டு கோட்டை பகுதியில் ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கூடம் (மல்டி பர்பஸ் ஹால்) அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணியை நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்கு அமைக்கப்பட்டு வரும் மெயின் ஹால், உணவருந்தும் அரங்கம், நவீன சமையல் அறை கூடம், வாகனங்கள் நிறுத்துமிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் கோட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்நோக்கு கூடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கூடத்தில் 400 நபர்கள் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கம், 200 நபர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையில் உணவு அரங்கம், நவீன சமையல் அறை கூடம், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மணமக்கள் அறைகள் மற்றும் விழா நடத்துபவர்கள் தங்குவதற்கான அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சேலம் மாநகரில் பருவமழையால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் பழைய பஸ் நிலையத்தை முற்றிலுமாக இடித்து ரூ.92.13 கோடியில் தற்போது அதிநவீன ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதேபோல், ரூ.20.45 கோடியில் எருமா பாளையம் திடக்கழிவு கிடங்கை நவீன முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கும் பணிகளும், ரூ.18.8 கோடியில் திருமணிமுத்தாற்றின் கரைகளை மேம்படுத்தும் பணிகளும், ஆனந்தா பாலம் மற்றும் விக்டோரியா வணிக வளாகம் அருகில் 2 இடங்களில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.945 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story