புதுச்சேரியில் இருந்து பிணமாக கொண்டு வந்தனர்: மின்வாரிய ஊழியர் மர்ம சாவு - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார்


புதுச்சேரியில் இருந்து பிணமாக கொண்டு வந்தனர்: மின்வாரிய ஊழியர் மர்ம சாவு - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 8:35 PM GMT)

புதுச்சேரியில் இருந்து பிணமாக கொண்டு வரப்பட்ட மின்வாரிய ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

நாகர்கோவில், 

ஈத்தாமொழி தோப்பன் குடியிருப்பை சேர்ந்தவர் அப்பாத்துரை. இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

என்னுடைய மகன் சிவராம்சிங் (வயது 45), சீர்காழியில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு நாகர்கோவில் அருகே உள்ள சோட்டபணிக்கன் தேரிவிளையை சேர்ந்த சுஜாதா என்பவரை திருமணம் செய்து வைத்தேன். சுஜாதா சீர்காழியில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அப்போது சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளருக்கும், அவருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக சீர்காழி போலீஸ் நிலையத்தில் வழக்கும் உள்ளது. இந்த நிலையில் சுஜாதா, அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஒருவருடன் சேர்ந்து கொண்டு என் மகனை வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறினார். வீட்டுக்கு வந்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள். இதனால் அச்சமடைந்த என் மகன் 3 நாட்களாக வீட்டுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்தியில் என் மகன் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக என்னிடம் சுஜாதா கூறினார். அப்போது சுஜாதாவுடன் பழகி வந்தவரும் ஆஸ்பத்திரியில் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று காலை என் மகனை புதுச்சேரியில் இருந்து ஆம்புலன்சு மூலம் பிணமாக கொண்டு வந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். என் மகனின் சாவில் மர்மம் இருக்கிறது. எனவே சுஜாதாவிடம் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story