புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் வெற்றிபெற்றதாக அறிவிப்பு


புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் வெற்றிபெற்றதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2020 4:00 AM IST (Updated: 14 Jan 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

செங்கம், 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6 இடங்களில் தி.மு.க., 2 இடத்தில் தே.மு.தி.க.ஆகியவையும் 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அப்போது ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சி.சுந்தரபாண்டியனும், அ.தி.மு.க. சார்பில் ரமேசும் போட்டியிட்டனர்.

இதில் தி.மு.க.கவுன்சிலர் சுந்தரபாண்டியனுக்கு 10 வாக்குகள் கிடைத்து அவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ரமேசுக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எனினும் சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையோ, அறிவிப்போ தேர்தல் அலுவலர் சபாநாயகன் வெளியிடவில்லை.

தொடர்ந்து அன்று மதியம் 3.30 மணிக்கு ஊராட்சி ஒன்றியக்குழு துணைதலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அலுவலர் சபாநாயகன் அறிவித்தார். ஆனால் அன்று மதியம் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சபாநாயகன் திடீரென அலுவலகத்திலிருந்து வெளியேறினார். அவரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் நடைபெறும் என மாலை 6 மணி வரை காத்திருந்த கவுன்சிலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் ஏற்கனவே வெற்றி பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்ட சுந்தரபாண்டியன் தனக்கு ஆதரவு அளித்த மற்ற 9 ஒன்றிய கவுன்சிலர்களுடன் திருவண்ணாமலைக்கு சென்று கலெக்டரிடம் நேரில் முறையிட்டார். இது குறித்து விசாரணை செய்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவராக சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் ஒன்றியக்குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கம்

இதேபோல் செங்கம் ஒன்றியத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவராக தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயராணிகுமார் வெற்றி பெற்றார். ஒன்றியக்குழு துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமதிபிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story