உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக கடைகளை ஒதுக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை
உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக கடைகளை ஒதுக்க வேண்டும் என்று கோவையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்ற கலெக்டர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்ற வகையில் உழவர் சந்தை உள்ளது. கோவை மாவட்டத்தில் அதுபோன்று ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி போன்ற இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. இந்த உழவர் சந்தைகளில் பெரும்பாலும் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்ளூர் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனை கண்டறிய உள்ளூர் விவசாயிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
தொண்டாமுத்தூர், சூலூர், பேரூர் உள்பட பல்வேறு இடங்களில் முட்டைகோஸ், காளிபிளவர் போன்ற காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் விற்பனை செய்ய உழவர் சந்தைகளில் அதிக கடைகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை கண்காணிப்பு இயக்க தலைவர் மனோஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று ஏராளமானவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒருசில அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்வதில்லை. அத்துடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் பஸ்கள் வருவதில்லை. இதனால் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள், தனியார் டாக்சிகள், ஆட்டோ உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் மாதம்தோறும் கூட்டம் நடத்தி இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story