உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: பஸ் மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: பஸ் மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2020 5:45 AM IST (Updated: 14 Jan 2020 3:10 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

உளுந்தூர்பேட்டை,

திருச்சியை உறையூர் பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் முத்தமிழ்செல்வன் (வயது 34). என்ஜினீயர். இவருடைய மனைவி நிஷா. இவர்களுக்கு சித்தார்த்(7) என்கிற மகனும், வைஷ்ணவி(1) என்கிற மகளும் இருந்தனர்.

முத்தமிழ்செல்வன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்படிப்பு படிப்பதற்காக வெளிநாடு சென்றிருந்தார். இதையடுத்து அவர் கடந்த வாரம் சொந்த ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக முத்தமிழ்செல்வன், தனது மனைவி நிஷா, குழந்தைகள் சித்தார்த், வைஷ்ணவி, மாமியார் மல்லிகாவுடன் சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து அனைவரும் நேற்று திண்டுக்கல் நோக்கி ஒரு காரில் புறப்பட்டனர். காரை முத்தமிழ்செல்வன் ஓட்டினார்.

நேற்று மதியம் 12 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் மலையம்மன் கோவில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புக்கட்டையில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் மறுபுறம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று தாறுமாறாக ஓடியது.

அந்த சமயத்தில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது, முத்தமிழ்செல்வன் ஓட்டி சென்ற கார் கண்இமைக்கும் நேரத்தில் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இருப்பினும் காரின் முன்பகுதி, பஸ்சுக்குள் சிக்கி உருக்குலைந்ததால் உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை. பின்னர் கயிறு கட்டி பஸ்சை சாலையோரம் கவிழ்த்தனர்.

அதற்குள் காரில் பயணம் செய்த முத்தமிழ்செல்வன், நிஷா, மல்லிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சித்தார்த், வைஷ்ணவி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே விபத்தில் பலியான முத்தமிழ்செல்வன் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினார். டயர் வெடித்ததால் பஸ் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story