கொரக்கவாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் திடீர் ராஜினாமா - அதிகாரியிடம் கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
கொரக்கவாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் திடீரென அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநத்தம்,
மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொரக்கவாடி ஊராட்சி மன்ற அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சக்திவேல் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் 9 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். இதையடுத்து நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.
தொடர்ந்து துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 11-ந்தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 4-வது வார்டு உறுப்பினர் தமிழ்வாணன் (வயது 40) என்பவர் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய தினமே அவர் துணை தலைவராகவும் பதவிஏற்று கொண்டார்.
இந்த நிலையில் நேற்று துணை தலைவர் தமிழ்வாணன் மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் நான் கூலி வேலை செய்து வருகிறேன். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல இருப்பதால், துணை தலைவருக்கான பணியை என்னால் சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சொந்த வேலை காரணமாக எனது துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறி அதற்கான கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் கொடுத்தார். அதனை பெற்ற அவர், பதவியேற்று ஒரு ஆண்டு ஆனால் தான் பதவியை ராஜினாமா செய்ய முடியும். இல்லையெனில் ஊராட்சி மன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் மூலம் பதவியை ராஜினாமா செய்யலாம் என்றார்.
இதையடுத்து தமிழ் வாணன், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஏற்பாடு செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்ற தலைவரான சக்திவேலுக்கும் தபால் மூலம் அனுப்பியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story