ஸ்ரீபெரும்புதூரில் விளையாட்டு மைதானங்களை பார்வையிட்ட கலெக்டர்


ஸ்ரீபெரும்புதூரில் விளையாட்டு மைதானங்களை பார்வையிட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:15 PM GMT (Updated: 13 Jan 2020 9:58 PM GMT)

தமிழக அரசின் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய விளையாட்டு மைதானங்களை காஞ்சீபுரம் கலெக்டர் பா.பொன்னையா பார்வையிட்டார்.

ஸ்ரீபெரும்புதூர், 

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக தமிழகம் முழுவதும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் சென்னையில் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கிளாய் ஊராட்சியில் திறந்து வைக்கப்பட்ட பூப்பந்து, கபடி, வாலிபால் விளையாட்டு மைதானங்களை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்ராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசும்போது, ‘காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 274 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பூப்பந்து, கபடி, வாலிபால் மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சீருடை, உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும், விளையாட்டுகள் மூலம் இளைஞர்கள் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் கூறினார். இதற்காக 2 கோடியே 6 லட்சம் ரூபாய் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..

அப்போது, பெண்கள் கபடி, பூப்பந்து விளையாட்டினையும், இளைஞர்கள் வாலிபால், கபடி, பூப்பந்து, கிரிக்கெட் விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் நயிம் பாஷா, பிச்சியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story