திருப்பூர் அருகே கழிவு பொருள் அரைக்கும் எந்திரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


திருப்பூர் அருகே கழிவு பொருள் அரைக்கும் எந்திரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 13 Jan 2020 10:32 PM GMT (Updated: 13 Jan 2020 10:32 PM GMT)

திருப்பூர் அருகே கழிவு பொருள் அரைக்கும் எந்திரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது திருப்பூர் காவிலிபாளையம்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கழிவு பொருட்கள் கடந்த ஒரு மாதம் எந்திரம் மூலம் அரைக்கப்படுகிறது. இந்த எந்திரம் மூலம் கழிவு பொருட்களை அரைக்கும் போது துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. ஈக்கள் அதிகமாக மொய்க்கிறது. கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது.

இதனால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் முதியோர்களுக்கும், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உடல்குறைவு ஏற்பட்டு வருகிறது. மேலும், கழிவு பொருட்களை அரைக்கும் எந்திரத்திற்கு மிக அருகில் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடியும், தொடக்கப்பள்ளியும் உள்ளது. இதனால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த கழிவு பொருள் அரைக்கும் எந்திரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே பருவாய் பகுதியை சேர்ந்த யுகாசினி என்ற இளம்பெண் கொடுத்த மனுவில்:- நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் பருவாய் பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 30) என்பவரை கலப்பு திருமணம் செய்தேன். எங்களுக்கு 1½ வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் எனது மாமியார் ருக்மணி என்னிடம் ரூ.2 லட்சம் வரதட்சணையாக வழங்க வேண்டும் எனக்கேட்டு கொடுமைபடுத்தி வருகிறார்.

மேலும், என்னையும் தாக்கவும் செய்கிறார். எனவே நானும், எனது கணவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் எனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு உதவி செய்து வருகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதுபோல் நொய்யல் ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் சிலர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் நொய்யல் ஆற்றங்கரையோரம் 35 குடும்பம் வசித்து வருகிறோம். குடிசை மாற்று வாரியம் மூலம் எங்களுக்கு வீடு வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் குடிசை மாற்று வாரியத்திடம் வழங்கியுள்ளோம்.

எங்களுக்கு வீரபாண்டி பிரிவில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் வீடுகளில் வீடு ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எங்களிடம் மேலும் பணம் கேட்டு வருகிறார்கள். எனவே எங்களுக்கு உடனே வீடு ஒதுக்க வேண்டும். எங்களிடம் பணமும் கேட்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்:-

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தோம். இதன்படி எங்களுக்கு காங்கேயம் அருகே நிழலி பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பட்டாவும் வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும் அந்த இடம் எங்களுக்கு முறைப்படி வழங்கப்படவில்லை. எனவே இந்த இடத்தை மீட்டு நாங்கள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில்:-

மின்வாரியத்தில் களத்தொழிலாளர்கள் நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதன் காரணமாக மின்நுகர்வோர் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தனிச்சையாக அறிவித்த இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர், கணக்கு பதவிக்கு நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை நிறுத்தி விட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி காலிப்பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பொங்குபாளையம் பகுதியில் அரசு ஊழியர்கள் பலர் இணைந்து ரூ.30 கோடி மதிப்பில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி எங்களுக்குள் பிரித்து எடுத்துக்கொள்ள முடிவு செய்து வாங்கினோம். ஆனால் இதனை தனியார் சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள். இதனை தடுக்கும் எங்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.


Next Story