குடிமங்கலம் பகுதிகளில் விடிய விடிய சலங்கை மாடு ஆட்டம்: கொட்டும் பனியில் கண்டு ரசித்த மக்கள்


குடிமங்கலம் பகுதிகளில் விடிய விடிய சலங்கை மாடு ஆட்டம்: கொட்டும் பனியில் கண்டு ரசித்த மக்கள்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:43 PM GMT (Updated: 13 Jan 2020 10:43 PM GMT)

குடிமங்கலம் பகுதிகளில் பொங்கலை வரவேற்கும் விதமாக விடிய, விடிய சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தை கொட்டும் பனியிலும் கிராம பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

போடிப்பட்டி,

ஏர் உழுதல்,வண்டி இழுத்தல்,தண்ணீர் இறைத்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்துப்பணிகளுக்கும் உறுதுணையாக விளங்குவது காளைகளாகும்.மேலும் பசுக்கள் பால் விற்பனை மூலம் விவசாயிகளுக்கு உபரி வருமானம் தருபவையாக விளங்குகிறது. எனவே இத்தகைய மாடுகளுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப்பொங்கலாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் உடுமலை,குடிமங்கலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப்பகுதிகளில் மாடுகளை தெய்வமாகவே வழிபட்டுக்கொண்டாடி மகிழ்கிறார்கள்.அந்த வகையில் பொங்கலன்று பிறக்கும் காளைக்கன்றுகளை தெய்வமாகப்போற்றி வழிபடுகிறார்கள்.அத்துடன் அதனை குடிமங்கலத்தையடுத்த சோமவாரப்பட்டியிலுள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு நேர்ந்துவிடும் பழக்கமும் உள்ளது.

இவ்வாறு நேர்ந்து விடப்படும் காளைகளில் ஒவ்வொரு கிராமத்தினரும் குறிப்பிட்ட காளைக்கன்றுகளை தேர்வு செய்து அதனை சலகெருது என்றும் சலங்கை மாடு என்றும் அழைக்கிறார்கள்.இந்தக்காளைகள் கோவில் காளைகள் என்பதால் அவற்றுக்கு மூக்கணாங்கயிறு கூட அணிவிப்பது கிடையாது. அவை கிராமம் முழுவதும் சுதந்திரமாக சுற்றி வருகிறது.

இந்த காளைகளுக்கு கன்றிலிருந்தே சில பயிற்சிகள் அளித்து தயார்படுத்துகிறார்கள். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத இரவுகளில் பொங்கலை வரவேற்கும் விதமாக ஊர்ப்பொது இடத்தில் உறுமி இசை ஒலிக்க உள்ளூரைச்சேர்ந்த தேவராட்ட கலைஞர்கள் இசைக்கேற்ப நடனமாடுவார்கள். பின்னர் அதில் ஒரு ஆட்டக்காரர் கால்களில் கட்டிய சலங்கைகளுடனும் கையில் இரண்டு நீண்ட குச்சிகளுடன் காளையின் முன் உறுமி இசைக்கேற்றவாறு நடனமாடுவார். காளையும் இசையையும் நடனத்தையும் ரசித்தவாறே பின்தொடர்கிறது. இந்தநிலையில் ஆட்டக்காரரின் நடனத்தில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் காளை அவரை முட்டுவதற்கு பாய்கிறது. உடனே அவர் தன்னுடைய குச்சிகளை குறுக்கே மறித்து காளையை கட்டுப்படுத்துகிறார்.இந்த நிகழ்வை சலகெருது மறித்தல் என்றும் சலங்கை மாடு ஆட்டம் என்றும் அழைப்பார்கள்.

உடுமலையை அடுத்த குறிச்சிக்கோட்டை, குறிஞ்சேரி, கொங்கல்நகரம், லிங்கம்மாவூர், அம்மாபட்டி, பெரியகோட்டை, வெனசப்பட்டி, ராஜாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்கழி மாதம் முழுவதும் சலங்கை மாடு ஆட்டம் நடத்தப்படும். .மார்கழிப்பனி கொட்டும் இரவுகளில் சீறிப்பாயும் காளைகளையும் அவற்றை அடக்கும் காளைகளையும் காண்பதற்கு ஏராளமானோர் திரள்கின்றனர். விடிய விடிய நடக்கும் கொண்டாட்டங்களால் கிராமங்களே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. பெரியகோட்டையில் நேற்று முன்தினம் இரவு சலங்கை மாடு ஆட்டம் நடந்தது. இதை கொட்டும் பனியிலும் கிராம மக்கள் கண்டு ரசித்தனர். உறுமி இசைக்கு ஏற்ப சலங்கை மாடு ஆடியது.

இதை தொடர்ந்து தேவராட்டம் எனப்படும் பாரம்பரிய நடனத்தை இளைஞர்கள் ஆடினார்கள். பெண்கள் கும்மிப்பாடல்களை பாடினார்கள். லிங்கம்மாவூர் பகுதியில் கன்றுகளை மறித்து சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலன்று இந்த சலகெருதுகளை சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலுக்கு அழைத்துச்சென்று ஆடி மகிழ்ந்து வழிபடுகின்றனர்.


Next Story