ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள குறைதீர்க்கும் மற்றும் பதிலளிக்கும் முறைகளை முறைப்படுத்துவதில் நாங்கள் நீண்ட தூரம் வந்துள்ளோம். இந்த அத்தியாவசிய பொதுதேவையை மேம்படுத்துவதில் அனைத்து துறைகளும் பங்களித்துள்ளன. புதுவை மக்கள் இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், தடைகள் இருந்த போதிலும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் அறிய விரும்பலாம். நம்மிடம் இருப்பதை உகந்த முறையில் பயன்படுத்துவதும், அதை மேலும் சிறந்ததாக உருவாக்குவதும்தான் இதன் நோக்கம். எங்களிடம் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதன் மூலம் எந்தவொரு புகாரையும் பதிவு செய்தல், கணினி மயமாக்குதல், கண்காணித்தல் செய்யப்படுகிறது. புகார்களை 100, 1031, 12 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ் அப், மின்னஞ்சல்கள், தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறை எண்ணை தவிர 9500560001, 9443460717 போன்ற வாட்ஸ் அப் எண்களும் உள்ளன. கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. புகார் அளிக்கப்பட்ட நேரம், தேதி, பெற்றவரின் விவரம் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
தேவைப்பட்டால் தலைமை குறைதீர்க்கும் அதிகாரி சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வருகிறார். குறைதீர்ப்பு அதிகாரி பாஸ்கரன், புகார்களின் உண்மை தன்மையை சரிபார்க்க தளத்திற்கும் செல்கிறார். இதுதொடர்பான குறிப்புகள் தலைமை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு 128 சிவில் வழக்குகளை லோக் அதாலத்துக்கு அனுப்பினோம். பெண்கள் மற்றும் மூத்த குடி மக்களின் புகார்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. செய்தித்தாள் அறிக்கைகளும் தினசரி கவனிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும் 12 ஆயிரத்து 506 புகார்களை பெற்றுள்ளோம். இந்த முறை தொடங்கப்பட்டதில் இருந்து 49 ஆயிரத்து 305 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சிறப்பாக செயல்பட்ட காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் வருகிற 26-ந்தேதி பாராட்டப்பட உள்ளனர்.
எந்த ஒரு பிரச்சினையையும் நிர்வாகத்துக்கு தொடர்ந்து தெரிவிக்குமாறு புதுச்சேரி மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சில சிக்கல்களுக்கு வலுவான தொழில்நுட்ப கொள்கை முடிவுகள் மற்றும் நிதி ஆதாரங்கள் தேவைப்படுகிறது. குறைதீர்க்கும் பகுப்பாய்வு கையேடு அடுத்தவாரம் வெளியிடப்படும். ஊழல் என்று அழைக்கப்படும் நிதி கசிவுகளை தடுக்க இப்போது அதிக மக்கள் ஆதரவை நாங்கள் நாடுகிறோம். சி.பி.ஐ. அலுவலகமும் புதுச்சேரியில் உள்ளது. மக்கள் அவர்களை நேரடியாக அணுகலாம்.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story