வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் போட்டி; மாணவ–மாணவிகள் பங்கேற்பு


வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் போட்டி; மாணவ–மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Jan 2020 10:15 PM GMT (Updated: 14 Jan 2020 2:09 PM GMT)

கரூரில் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கரூர், 

நாகரிக உலகில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பண்டிகை கால வாழ்த்துகளை செல்போன், இ–மெயில், வாட்ஸ்–அப், முகநூல் மூலமாக ஒருவரை எளிதில் தொடர்பு கொண்டு தெரிவித்து விடுகிறோம். இதனால் வாழ்த்து அட்டைகள் மூலம் பண்டிகை கால வாழ்த்துகளை தெரிவிப்பது குறைந்துவிட்டது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, கரூர் வடக்கு காந்திகிராமத்தில் உள்ள கலைச்செம்மல் எம்.எஸ்.தேவசகாயம் நினைவு கலைகள் மற்றும் கைவினைகள் மையம் சார்பில் வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டி நடந்தது. 6–8–ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9 முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன.

வாழ்த்து அட்டையில் திருக்குறள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை கால வாழ்த்து வாசகங்கள் இடம்பெற்ற அட்டைகள், திருமண வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து, அன்னையர் தின வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு வாழ்த்து அட்டைகளை கண்களை கவரும் விதமாகவும், அதில் கவிதைகளை இடம்பெற செய்தும் மாணவர்கள் ஆர்வத்துடன் வடிவமைத்து படைப்புகளாக சமர்ப்பித்தனர். மொத்தம் 350 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவுக்கு ஓய்வு பெற்ற தமிழாசிரியர் நன்செய்புகளூர் அழகரசன் தலைமை தாங்கினார். பிரபலகுமாரி, ஓவியர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், தேசிய விருது பெற்ற கல்வியாளர் கோவிந்தராஜூ ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் செழியன் நன்றி கூறினார்.


Next Story