பூலாம்வலசில் சேவல் சண்டை இன்று தொடங்குகிறது


பூலாம்வலசில் சேவல் சண்டை இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Jan 2020 3:30 AM IST (Updated: 14 Jan 2020 7:52 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விழாவையொட்டி பூலாம்வலசில் சேவல் சண்டை இன்று தொடங்குகிறது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தில் நடைபெறும் சேவல் சண்டை எனும் சேவல் கட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இங்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 2 சேவல்களை சண்டையிட செய்வார்கள். அதில் தோற்றுப்போகும் சேவலை வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்கள். மேலும் தோற்றுப்போன சேவலை கோச்சை என்று அழைக்கின்றனர். சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் இங்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை போகிறது.

சேவல்களில் செவளை, காகம், கீரி, நூலான், வல்லூறு, மயில், பேடு உள்பட பல வகைகள் உள்ளன. சண்டைச்சேவல்களை தனிக்கவனம் செலுத்தி கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட சத்தான தானியங்களை உணவாக கொடுத்து வளர்க்கின்றனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் சேவல் சண்டை இன்று(புதன்கிழமை) தொடங்கி வருகிற 18–ந்தேதி வரை மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சேவலுடன் வருவார்கள். மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தினமும் ஆயிரக்கணக்கான சேவல்கள் சண்டையில் ஈடுபடுத்தப்படும். இந்த சேவல் சண்டையில் வெற்றி பெற்றால் அந்த வருடம் முழுவதும் தொழிலில் மேன்மை அடைவதாக ஒரு சம்பிரதாயம் உள்ளது.


Next Story