திண்டிவனத்தை தனி ஊராட்சி மன்றமாக ஒதுக்கி தர வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை மனு


திண்டிவனத்தை தனி ஊராட்சி மன்றமாக ஒதுக்கி தர வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 15 Jan 2020 4:00 AM IST (Updated: 14 Jan 2020 8:20 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தை தனி ஊராட்சி மன்றமாக ஒதுக்கி தர வேண்டும் என மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை, 

போளூர் தாலுகா அத்திமூர், அண்ணாநகர், ஜெய்தீம் நகர், களியம் அம்பேத்கர் நகர், காந்திநகர் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் போளூர் வட்டத்திற்கு உட்பட்ட திண்டிவனம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். திண்டிவனம் ஊராட்சியின் மொத்த வாக்கு 6,440 ஆகும். இதில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 3 வார்டு ஆதிதிராவிடர் சமூகத்தினர் போட்டியிடுவதற்கும், 9 வார்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சமூகத்தினர் போட்டியிடுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். 40 வருடத்திற்கு பிறகு திண்டிவனம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் மக்களுக்காக சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேசமயம் 20 வருடமாக அனுபவித்து வந்த ஒன்றிய குழு உறுப்பினர் பதவியும் சுழற்சி முறையில் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆதிதிராவிட மக்கள், தலைவர் பதவிக்கு போட்டியிட்டோம். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஆதிதிராவிட மக்கள் வர வேண்டாம், குறவன் மக்கள் தலைவராக வரட்டும் என்று முடிவு செய்தனர். அதனால் 3 குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் தலைவராக வர முடிகின்றது.

2,200 ஓட்டுக்களைக் கொண்ட ஆதிதிராவிட மக்கள் தலைவராக வர முடியவில்லை. எந்த பதவியும் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு 7, 8, 9, 10, 11, 12 (திண்டிவனம், களியம், பனப்பாம்பட்டு, களியம் காலனி) வார்டுகளை இணைத்து திண்டிவனத்தை தனி ஊராட்சி மன்றமாக ஒதுக்கி தர வேண்டும். தனி ஊராட்சி மன்றமாக ஒதுக்கினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story