மந்திரிசபை விரிவாக்கத்திற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்


மந்திரிசபை விரிவாக்கத்திற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 15 Jan 2020 3:00 AM IST (Updated: 14 Jan 2020 10:49 PM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கத்திற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

சிக்கமகளூரு, 

மந்திரிசபை விரிவாக்கத்திற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மந்திரிசபை விரைவில் விரிவாக்கம்

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா அருகே சோலாப்புரா கிராமத்தில் நேற்று குரு சித்தராம சிவயோகி ஜெயந்தி விழா நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூருவுக்கு சென்றார். அவர் அஜ்ஜாம்புரா அருகே உள்ள செட்டர்சித்தப்பா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் இறங்கினார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். அதற்கான நாள் விரைவில் முடிவு செய்யப்படும். மந்திரி சபை விரிவாக்கத்திற்காக பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கர்நாடகத்துக்கு வர உள்ளார். அவருடைய வருகைக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்வோம்

இதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் வந்த போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பாக மங்களூருவில் 2 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். அவ்வழக்கு தொடர்பாக மேலும் யாரேனும் கர்நாடகத்தில் பதுங்கி இருந்தால் அவர்களையும் கைது செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர்கள் கார் மூலம் விழா நடை பெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு விழாவை முதல்-மந்திரி எடியூரப்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாடுபடுவேன்

குரு சித்தராம சிவயோகியின் 847-வது ஜெயந்தி விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். குரு சித்தராம சிவயோகி மக்களுக்காக பாடுபட்டவர். மக்களுக்கு தொழில்கள், விவசாயம் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தவர். சிவன் பக்தரான அவர் மக்கள் தொகை பெருக்கம், எதிர்கால தேவைகள் ஆகியவற்றை அறிந்து அப்போதே குளங்கள், ஏரிகளை உருவாக்கியவர்.

விவசாயத்துக்கும், கிராமங்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை மட்டும் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் நல்லது செய்தார். ஆன்மிகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய வழியைப் பின்பற்றி எதிர்வரும் காலத்தில் நானும் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

முன்னோடி மாநிலமாக மாற்றுவேன்

விவசாயிகளுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன். கோந்தி கிராமத்தில் 180 குளங்களை சீரமைத்து அவற்றில் தண்ணீர் நிரப்ப பத்ரா கால்வாய் திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. என்னுடைய கனவு மக்களுக்கு சேவை செய்வதுதான்.

இன்னும் 3 ஆண்டுகளில் கர்நாடகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவேன். இது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் 5-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், மந்திரிகள் பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி, ஷோபா எம்.பி., ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story