கலப்பட பொருட்களை விற்றால் உணவு பாதுகாப்பு சான்றிதழ் ரத்து - கலெக்டர் எச்சரிக்கை


கலப்பட பொருட்களை விற்றால் உணவு பாதுகாப்பு சான்றிதழ் ரத்து - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Jan 2020 10:15 PM GMT (Updated: 14 Jan 2020 6:15 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிகர்கள் கலப்பட பொருட்களை விற்றால் உணவு பாதுகாப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி, 

தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு ஆணையாளர், மாவட்ட உணவு நியமன அலுவலர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் விதிகளை மீறி செயல்படும் உணவு வணிகர்களுக்கு பிரிவு 69-ன் கீழ் அபராதம் விதிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தேநீர் கடைகள், பேக்கரி, ஓட்டல், சில்லறை விற்பனையாளர்கள் போன்ற உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். மாறாக உணவு வணிகம் மேற்கொண்டால் அபராதம் விதிக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு உணவு வணிகராவது வடை, பஜ்ஜி போன்ற உணவுப்பொருட்களை முறையாக மூடி வைக்காமல் திறந்து வைத்து வியாபாரம் செய்தாலோ, சுகாதாரமற்ற சூழ்நிலையில் உணவுப்பொருட்களை தயாரித்தாலோ, தடை செய்யப்பட்ட புகையிலை, நிகோடின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்தாலோ, கலப்பட பொருட்களை வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படும். மேலும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நுகர்வோர்கள் உணவு பாதுகாப்பு குறித்து புகார் செய்ய விரும்பினால் உணவு பாதுகாப்பு துறையின் மாநில வாட்ஸ்-அப் 9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story