உள்ளாட்சி தேர்தல் முறைகேட்டை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சி தேர்தல் முறைகேட்டை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 6:37 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் முறைகேட்டை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தேர்தல் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் விதிமுறைகளை மீறி முறைகேடுகளுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கோஷங்கள்

உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், மொரப்பூரில் நடத்தப்பட்ட போலீஸ் தடியடியை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திராவிடர் கழக மாநில நிர்வாகி ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யாசின்தென்றல், தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜ், தி.மு.க. சார்பு அமைப்பு நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்மகேஸ்வரன், தங்கமணி, ரகீம், முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சேட்டு, செங்கண்ணன், கோபால், செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story