கர்நாடகத்தில் 6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு


கர்நாடகத்தில் 6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2020 3:30 AM IST (Updated: 15 Jan 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடக மாநில ேதர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

9-ந் தேதி தேர்தல்

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை நகரசபை, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிக்பள்ளாப்பூர் நகரசபை, மைசூரு மாவட்டம் உன்சூர் நகரசபை, பல்லாரி மாவட்டம் சிரகுப்பா நகரசபை மற்றும் அதே மாவட்டத்தில் உள்ள தெக்கலோகோட்டே பட்டண பஞ்சாயத்து, விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி புரசபை ஆகிய 6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெறும்.

இவற்றில் மொத்தம் 167 வார்டுகள் உள்ளன. இதில் நகரசபையில் 124 வார்டுகளும், புரசபையில் 23 வார்டுகளும், பட்டண பஞ்சாயத்தில் 20 வார்டுகளும் அடங்கும். அதே போல் மைசூரு மாநகராட்சியில் காலியாக உள்ள 18-வது வார்டு, கானாப்புரா பட்டண பஞ்சாயத்தில் 5-வது வார்டு, இரேகெரூர் பட்டண பஞ்சாயத்தில் 12-வது வார்டுகளுக்கும் அதே தேதியில் இடைத்தேர்தல் நடைபெறும்.

ஓட்டு எண்ணிக்கை

இதற்கான மனு தாக்கல் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 28-ந் தேதி கடைசி நாள். 29-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 31-ந்தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். மறுவாக்குப்பதிவு இருந்தால் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி நடைபெறும். 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

அதே போல் பெலகாவி மாவட்ட பஞ்சாயத்தில் 59-வது வார்டு மற்றும் 8 தாலுகா பஞ்சாயத்துகளில் 10 வார்டுகள் என மொத்தம் 11 வார்டுகளுக்கும் பிப்ரவரி 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இதற்கான மனு தாக்கல் வருகிற 25-ந் தேதி தொடங்கும். மனுக்களை தாக்கல் செய்ய 28-ந் தேதி கடைசி நாள் ஆகும். 29-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 31-ந் தேதி கடைசி நாள். ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறும். தேர்தல் நடைபெறும் இடங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று (அதாவதுநேற்று) முதல் அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story