மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனையால் பரபரப்பு


மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனையால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Jan 2020 4:45 AM IST (Updated: 15 Jan 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்களால் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில்வே நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் டெலிபோனில் பேசினார். அவர் மதுரையில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த மிரட்டல் குறித்து அதிர்ச்சி அடைந்த சென்னை போலீசார், உடனே மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிரடி சோதனை

அதை தொடர்ந்து மதுரை பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ்நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், பஸ்கள், பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். வெகுநேரமாக சோதனை மேற்கொண்டும் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதே போல் இன்று (புதன்கிழமை) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் ஏதாவது வெடிகுண்டு இருக்கலாமா? என்றும் போலீசார் சோதனையிட்டனர். அங்குள்ள வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங் கள், மாடுகள் கட்டும் இடம் போன்ற இடங்களிலும் சோதனை நடந்தது. அங்கும் எந்த பொருளும் கிடைக்கவில்லை.

பரபரப்பு

எனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை சூளைமேட்டில் இருந்து அந்த நபர் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மனநல மையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் பேசியது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டலால் மதுரை பஸ் நிலையங்கள் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டன. 

Next Story