சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
சுரண்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரண்டை,
தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஊர்களில் சுரண்டையும் ஒன்று. அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். ஊரைச் சுற்றி நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதுதவிர அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுரண்டை நகரப்பஞ்சாயத்தில் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த ஊரில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு 6 படுக்கைகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஒரு மாதத்துக்கு சுமார் 10 பிரசவங்கள் நடக்கிறது.
அந்த ஊர் மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வரப்பிரசாதமாக உள்ளது. அந்த சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படவில்லை. அந்த பகுதியில் திடீரென்று விபத்து, அவசர சிகிச்சை தேவைப்படும் நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற முடியாத நிலையில் இருக்கிறது.
சுரண்டை அருகே உள்ள பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். 29-12-2010 அன்று தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவர் இந்த “ஆரம்ப சுகாதார நிலையம் 48 படுக்கை வசதியுடன் விரிவுபடுத்தப்படும்“ என்று கூறினார்.
அதன்பிறகு விரிவாக்கப்பணிகள் தொடங்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம் விரிவுபடுத்தப்படும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை 50 படுக்கைகளுடன் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழப்பாவூர் வட்டார மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “சுரண்டையில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கவனத்தில் கொண்டு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்துவது குறித்து அரசிடம் கோரிக்கை வைப்போம். மேலும் தரம் உயர்த்த வேண்டும் என்றால் 5 ஏக்கர் நிலம் வேண்டும். அந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டலாம். தற்போது அரசுக்கு சொந்தமாக அந்த ஊரில் 5 ஏக்கர் நிலம் இல்லை. இதுபற்றி அரசிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்படும். அரசு அனுமதி கொடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை தொடங்குவோம்” என்றார்.
Related Tags :
Next Story