நெல்லையில் ‘கிடுகிடு’ விலை உயர்வு: ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை


நெல்லையில் ‘கிடுகிடு’ விலை உயர்வு: ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 14 Jan 2020 10:00 PM GMT (Updated: 14 Jan 2020 7:18 PM GMT)

நெல்லையில் பொங்கல் பண்டிகையையொட்டி கிடுகிடுவென விலை உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

நெல்லை, 

பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள பூ மார்க்கெட்டுகள், பூக்கடைகளிலும் பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. நெல்லை சந்திப்பில் உள்ள கெட்வெல் பூ மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் மற்றும் பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூக்களை வாங்கிச்சென்றனர்.

இதையொட்டி பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்த்தி விற்கப்பட்டது. நேற்று மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. குறைந்த அளவில் மல்லிகை பூக்கள் வரத்து இருந்ததால் அவை மதியத்துக்குள் விற்று தீர்ந்தன. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த பூக்களின் விலை அதிகமாக இருந்ததால், சில பெண்கள் செவ்வந்தி பூக்கள், கலர் பூக்களை வாங்கிச்சென்றனர். கலர் பூக்கள் கிலோ ரூ.300-க்கும், சின்ன ரோஜா பூக்கள் ரூ.200-க்கும், செவ்வந்தி பூக்கள் ரூ.150-க்கும் விற்பனை ஆனது.

இதேபோல் கோழிக்கொண்டை பூ, கேந்தி பூ, மரிக்கொழுந்து, பச்சை இலை, துளசி ஆகியவையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. பூமாலைகள், கதம்பம் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது.

Next Story