தாளவாடி அருகே, யானைகள் அட்டகாசம்; ராகி பயிர் நாசம்


தாளவாடி அருகே, யானைகள் அட்டகாசம்; ராகி பயிர் நாசம்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:15 PM GMT (Updated: 14 Jan 2020 7:43 PM GMT)

தாளவாடி அருகே யானைகள் அட்டகாசம் செய்ததில் ராகி பயிர் நாசமானது.

தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதற்காக விவசாயிகள் தோட்டங்களில் காவல் காக்கிறார்கள். ஆனால் அவர்களை துரத்தும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

தாளவாடி அருகே உள்ள இரியபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குருபசுவா (வயது 50), நாகராஜ் (40), சித்தசெட்டி (58). விவசாயிகள்.

இவர்கள் 3 பேருக்கும் அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் ராகி பயிரிட்டிருந்தார்கள். பயிர் முற்றியிருந்ததால் செடியை அறுவடை செய்து, ராகியை தோட்டத்திலேயே குவித்து வைத்து இருந்தார்கள். யானைகள் வந்து நாசப்படுத்திவிடுமே என்று 3 பேரும் தோட்டத்தில் காவல் காத்தார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 10 யானைகள் கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியே வந்தன. பின்னர் குருபசுவா, நாகராஜ், சித்தசெட்டி ஆகியோருடைய தோட்டங்களில் புகுந்து குவித்து வைத்திருந்த ராகியை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன.

அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்த 3 விவசாயிகளும் யானைகளை ஒலி எழுப்பி விரட்ட முயன்றார்கள்.

அப்போது ஆவேசம் அடைந்த யானைகள் 3 விவசாயிகளையும் துரத்தின. இதனால் பயந்துபோன விவசாயிகள் ஊருக்கு ஓடி உயிர் தப்பினார்கள்.

பின்னர் கிராமமக்களிடம் தகவல் கூறி அனைவரையும் ஒன்று திரட்டி தீப்பந்தங்களுடன் தோட்டங்களுக்கு வந்தார்கள். பிறகு தீப்பந்தங்களை காட்டி யானைகளை விரட்டினார்கள். ஆனால் யானைகள் மீண்டும் கிராமமக்களை துரத்தியது. கிராமமக்களும் விடாமல் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டார்கள்.

சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்கு சென்றன. யானைகள் மிதித்ததில் குவித்து வைக்கப்பட்டு இருந்த 5 ஏக்கர் ராகி பயிர்கள் நாசம் ஆனது.

‘கடன் வாங்கி விவசாயம் செய்தோம். அறுவடை செய்த பின்னர் அனைத்து பயிர்களையும் யானைகள் நாசம் செய்துவிட்டன. அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்கின்றன. இதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தார்கள்.

Next Story