பொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு


பொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2020 3:45 AM IST (Updated: 15 Jan 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

தேனி நகரில் செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்குவதற்கு சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி,

தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் செங்கரும்பு, மணக்கும் மஞ்சள் குலை ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கிறது.

இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தேனியில் நேற்று செங்கரும்பு, மஞ்சள் குலை விற்பனை செய்வதற்காக சாலையோரம் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை ஆகிய பிரதான சாலைகளில் தற்காலிக கடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் பூக்கள், வீட்டின் வாசல் கதவில் கட்டுவதற்கான கூரைப்பூ போன்றவை விற்பனையும் களைகட்டியது. இவற்றை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதுபோல், தேனி வாரச்சந்தை வளாகத்திலும் கரும்பு விவசாயிகள், வியாபாரிகள் கரும்பு கட்டுகளை அடுக்கி வைத்து விற்பனை செய்தனர். விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250 வீதம் விற்பனை செய்தனர். அதே சந்தை வளாகத்தில், வியாபாரிகள் ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.320 வரை விற்றனர்.

அதேபோல், சாலையோர தற்காலிக கடைகளில் ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இதனால், விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்ட இடத்தில் கூட்டம் அலைமோதியது. அதுபோல், சில்லறையில் ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது.

மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. கூரைப்பூ ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

மேலும், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, வாழை இலை போன்றவை விற்பனை செய்வதற்கும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றையும் மக்கள் வாங்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தேனி நகரில் பொருட்கள் வாங்க குவிந்ததால், நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அந்த பகுதியில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சாலைகள், கடைவீதிகளில் பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

Next Story