உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் பிப்ரவரி 2-ந்தேதி கடைசிநாள்


உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்  பிப்ரவரி 2-ந்தேதி கடைசிநாள்
x
தினத்தந்தி 15 Jan 2020 4:00 AM IST (Updated: 15 Jan 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 2-ந்தேதி கடைசிநாள் ஆகும். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை யாரும் தாக்கல் செய்யவில்லை.

திண்டுக்கல், 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 23 மாவட்ட கவுன்சிலர்கள், 232 ஒன்றிய கவுன்சிலர்கள், 306 ஊராட்சி தலைவர்கள், 2 ஆயிரத்து 772 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 333 பதவிகள் உள்ளன.

அதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 9 ஊராட்சி தலைவர்கள், 466 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 476 பேர் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து மீதமுள்ள 2 ஆயிரத்து 857 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த பதவிகளுக்கு 9 ஆயிரத்து 271 பேர் போட்டியிட்டனர்.

இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.9 ஆயிரமும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் வேட்பாளர்கள் செலவு செய்வதற்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து இருந்தது.

மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 3 பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்டவர்கள், மாவட்ட ஊராட்சி செயலாளரிடமும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் பதவி ஏற்பு, மாவட்ட ஊராட்சிக்குழு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மற்றும் பதவி ஏற்பு ஆகியவை பரபரப்பாக நடைபெற்றன. இதனால் தேர்தலில் போட்டியிட்டவர்கள் செலவு கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை.

ஆனால், அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 3-ந்தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story