பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பறித்த வக்கீல் கைது
பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பறித்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 38). வக்கீலான இவர், நேற்று முன்தினம் மாலை நண்பர் ஒருவருடன் குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சில பத்திரங்களை மீனாட்சி சுந்தரம் கேட்டு இருந்ததாகவும், அது சம்பந்தமான பத்திரத்தை ஊழியர்கள் எடுத்து, அலுவலக இருக்கையின் மேல் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த பத்திரத்தை எடுத்து, தன்னுடன் வந்தவரிடம் மீனாட்சி சுந்தரம் கொடுத்தார். அந்த நபர், அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மாயமாகிவிட்டார். இதற்கிடையில் அலுவலக ஊழியர்கள், மீனாட்சி சுந்தரத்தை பிடித்து, குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் மீனாட்சி சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்திரத்துடன் மாயமான நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story