கோர்ட்டுக்கு வரும் போது ரவுடியை கொல்ல சதி செய்தது அம்பலம் வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது


கோர்ட்டுக்கு வரும் போது ரவுடியை கொல்ல சதி செய்தது அம்பலம் வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2020 11:30 PM GMT (Updated: 14 Jan 2020 9:33 PM GMT)

புதுவையில் கோர்ட்டுக்கு ஆஜர்படுத்தும் போது ரவுடியை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, 

புதுவையில் கோர்ட்டுக்கு ஆஜர்படுத்தும் போது ரவுடியை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கும்பல்

புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் பின்புறமுள்ள பெரியபாளையத்தம்மன் பகுதியில் ஒரு ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

சந்தேகத்தின்பேரில் அவர்களை சோதனை போட்டதில் ஒரு நாட்டு வெடிகுண்டு, 2 கத்திகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அவர்களை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரித்தனர். இதில் அவர்கள் நெருப்புகுழி ராமதாஸ் வீதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது 20), வெங்கடேஷ் (21), சூர்யமூர்த்தி (21), சிவா என்கிற சிவராஜ் (39), கார்த்தி (24), ஹேமச்சந்திரன் (24), இருசப்பன் (21) என்பதும் இவர்கள் ரவுடிகள் என்றும் தெரியவந்தது.

கோர்ட்டுக்கு வரும் வழியில்...

மேலும் முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடி அன்புரஜினி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சோழனை கொலை செய்ய அன்பு ரஜினியின் தம்பி ஜெரிக்கோ அவரது நண்பர்கள் சபதம் ஏற்று இருப்பதும் இதற்காக அவர்கள் பதுங்கி இருந்ததும் அம்பலமானது.

காலாப்பட்டு சிறையில் உள்ள ரவுடி சோழனை ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக வருகிற 20-ந் தேதி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது அவரை கொலை செய்வது என்றும், எந்த இடத்தில் வைத்து கொலை செய்யலாம் என்பது குறித்தும் பிடிபட்டவர்கள் திட்டம் தீட்டி வந்தது தெரியவந்தது. பிடிபட்டவர்களில் சூர்யா, சிவா ஆகியோர் மீது கொலை, வெடிகுண்டு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து நேற்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

பரபரப்பு

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெரிக்கோ, உதயகுமார் உள்ளிட்ட பலரை வலைவீசி தேடி வருகின்றனர். புதுவையில் ரவுடி அன்பு ரஜினி கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி கும்பல் போலீசில் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story