பாண்டுப்பில் பயங்கரம் ஆசிரியை சுத்தியலால் அடித்து கொலை கொலையாளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை
ஆசிரியையை சுத்தியலால் அடித்துக்கொலை செய்துவிட்டு, ரியல் எஸ்டேட் ஏஜெண்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
ஆசிரியையை சுத்தியலால் அடித்துக்கொலை செய்துவிட்டு, ரியல் எஸ்டேட் ஏஜெண்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி ஆசிரியை
மும்பை பாண்டுப் டேங் ரோடு பகுதியில் உள்ள வக்ரதுந்த் பேலஸ் குடியிருப்பில் கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தவர் யாஸ்மிதா(வயது37). இவர் முல்லுண்டு பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் யாஷ்மிதா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அவரது வருகைக்காக கட்டிடத்தின் வாகன நிறுத்தப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காத்திருந்தார்.
சுத்தியலால் அடித்துக்கொலை
இந்தநிலையில் யாஸ்மிதா வந்தவுடன் அந்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென தான் வைத்திருந்த சுத்தியலால் ஆசிரியையின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில், மண்டை உடைந்து ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டிட காவலாளி அந்த நபரை பிடிக்க முயன்றார். எனினும் அவர் காவலாளியை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
இதற்கிடையே படுகாய மடைந்த யாஸ்மிதா சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர்.
கொலையாளி தற்கொலை
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், யாஸ்மிதாவை கொலை செய்தவர் அவருக்கு நன்கு அறிமுகமான பாண்டுப் மேற்கு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கிஷோர் சாவந்த்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்தநிலையில் இரவு 8 மணியளவில் கிஷோர் சாவந்த் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். பின்னர் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர் சாவந்த் உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாண்டுப் போலீசார், கிஷோர் சாவந்த் ஏன் ஆசிரியையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியையை கொலை செய்து விட்டு ரியல் எஸ்டேட் ஏஜெண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாண்டுப் பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story