மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் ; வடக்கு மண்டல ஐ.ஜி. தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் கூறினார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை, அரக்கோணம் உட்கோட்டங்களில் உள்ள 22 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், குற்றங்கள் தடுப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் மாவட்டம் முழுவதிலும் 53 பீட் (நிர்ணயிக்கப்பட்ட ரோந்து அமைப்பு) போலீசார் தொடக்கம் மற்றும் பொதுமக்கள் புகார்கள் அளிப்பதற்கான ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் முகநூல் பக்கம் மற்றும் வாட்ஸ் அப் எண் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சி ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி முன்னிலை வகித்தார். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் கலந்து கொண்டு, புதிதாக தொடங்கப்பட்ட ரோந்து அமைப்பு மற்றும் முகநூல் பக்கம், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றை தொடங்கி வைத்து, போலீசாருக்கு ஹெல்மெட் மற்றும் உபகரணங்கள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
ஏற்கனவே போலீசார் பீட் பகுதியில் ரோந்து சென்று வருகின்றனர். தற்போது இந்த ரோந்து பணி மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட 53 பீட் அமைப்புகளில் குறிப்பிட்ட போலீசார் தொடர்ந்து 3 மாதம் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் பீட் புத்தகத்தில் அந்த பகுதியில் உள்ள அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
குறிப்பிட்ட பீட் பகுதியில் போலீசார் தொடர்ந்து 3 மாதம் ரோந்து பணியில் இருக்கும் போது அந்த பகுதியில் உள்ள மொத்த விவரங்களும் நன்றாக தெரிந்து கொள்ள முடியும். இது குற்றங்களை தடுக்க பயனுள்ளதாக இருக்கும். குற்றமே நடைபெறக்கூடாது என்பது தான் நோக்கம். குற்றங்கள் நடைபெற்றாலும் எளிதாக அந்த இடத்திற்கு போலீசார் சென்று நடவடிக்கை எடுக்க முடியும்.
இதுதவிர பொதுமக்கள் புகார் தெரிவிக்க முகநூல்பக்கம், வாட்ஸ்அப் எண் ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பதோடு மட்டும் நின்று விடாமல், பொதுமக்கள் தெரிவித்த புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் அதில் (அப்டேட்) பதிவிடப்படும்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் காவலன் செல்போன் செயலி குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி, போலீசாரின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார்.
இதில் ராணிப்பேட்டை, அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களின் போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் நன்றி கூறினார்.