நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு? கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதில்


நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு? கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதில்
x
தினத்தந்தி 17 Jan 2020 5:00 AM IST (Updated: 16 Jan 2020 10:38 PM IST)
t-max-icont-min-icon

நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவா? என்பது குறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பாலசந்திர ஜார்கிகோளி பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவா? என்பது குறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பாலசந்திர ஜார்கிகோளி பதில் அளித்துள்ளார்.

பால் விலையை உயர்த்த கோரிக்கை

கர்நாடகத்தில் அரசின் பால் கூட்டுறவு சங்கம் மூலம் நந்தினி என்ற பெயரில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நந்தினி பாலின் விலையை ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு பால் உற்பத்தி அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதாவது கடந்த 3 ஆண்டுகளாக நந்தினி பாலின் விலையை உயர்த்தாத காரணத்தால், கட்டாயம் விலை உயர்த்த வேண்டும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள், பிற பால் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நந்தினி பாலின் விலை ரூ.3 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவரான பாலசந்திர ஜார்கிகோளியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஆலோசித்து முடிவு

நந்தினி பாலின் விலை கடந்த 3 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பால் விலையை தற்போது உயர்த்த வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. நந்தினி பாலின் விலையை ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்த்த வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள 14 பால் கூட்டமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். ரூ.3 வரை பாலின் விலை உயர்த்தப்படுமா? என்பதை சொல்ல முடியாது. பால் விலையை உயர்த்துவது குறித்து நாளை (அதாவது இன்று) இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

இதற்காக பால் கூட்டமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அப்போது பால் விலையை உயர்த்துவதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து விவாதிக்கப்படும். பால் விலையை உயர்த்துவதா?, வேண்டாமா?, அப்படி உயர்த்தினாலும் எவ்வளவு உயர்த்தலாம் என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பாலசந்திர ஜார்கிகோளி கூறினார்.

Next Story