மனைவி, 2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தஞ்சை நகைக்கடை அதிபரும் சாவு


மனைவி, 2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தஞ்சை நகைக்கடை அதிபரும் சாவு
x
தினத்தந்தி 16 Jan 2020 11:15 PM GMT (Updated: 16 Jan 2020 5:11 PM GMT)

மனைவி, 2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தஞ்சை நகைக்கடை அதிபரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மலைக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 47). இவர் அங்கு நகைக்கடை நடத்தி வந்தார். கடந்த 12-ந் தேதி செல்வராஜ் தனது மனைவி செல்லம்(43), மகன்கள் நிகில்(20), முகில்(14) ஆகியோருடன் திருச்சிக்கு வந்தார். மேலரண்சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

கடந்த 13-ந் தேதி இரவு செல்வராஜ் தனது மனைவி செல்லம் மற்றும் மகன்களை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, அவரை கோட்டை போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு செல்வராஜ் தங்கி இருந்த விடுதியில் இருந்து அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “தனது மகன் நிகில் மனவளர்ச்சி குன்றி இருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், அதனால் குடும்பத்துடன் சாக முடிவு செய்ததாகவும்” எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜிடம் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சோமசுந்தரம் வாக்குமூலம் பெற்றார். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Next Story