காணும் பொங்கலை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


காணும் பொங்கலை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 17 Jan 2020 3:30 AM IST (Updated: 16 Jan 2020 10:59 PM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். மேலும் பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி நேற்று தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா, முயல்தீவு, திருச்செந்தூர் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், குருமலை அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர். கடற்கரை மற்றும் பூங்காக்களையொட்டி பல தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தின்பண்டங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காணும் பொங்கல் பண்டிகையான நேற்று, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

முன்னதாக காலை 10 மணிக்கு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, போக்குவரத்து உதவி மேலாளர் சமுத்திரம், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் வளர்மதி, துணை தாசில்தார் செல்வகுமார், பஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி யோகராஜ், வீரசக்க தேவி ஆலய தலைவர் முருகபூபதி, ஆலய செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர், துணை தலைவர் முருகேசன் ஆகியோர் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் வீரசக்கதேவிக்கு 16 வகையான சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் மாட்டுக்கு கோமாதா பூஜை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட இசை பள்ளி சார்பில் மங்கள இசை, கரகாட்டம், இன்னிசை கச்சேரி, காவடி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மெல்லிசை கச்சேரி, தப்பாட்டம் நடந்தது. கலைமாமணி விருது பெற்ற கைலாசமூர்த்தி தலைமையில் நாட்டுபுற கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோட்டைக்கு வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்களை பார்வையிட்டு தங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மரத்தடியில் அமர்ந்து சென்றனர். குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடினர். பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டது. நேற்று இரவு வரை சுற்றுலா பயணிகள் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு தூத்துக்குடியில் இருந்து குறுக்குசாலை மற்றும் புதியம்புத்தூர் வழியாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசந்திரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story