டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் தகராறு: பீர் பாட்டிலால் குத்தி கொத்தனார் கொலை - தொழிலாளி கைது
திருச்செந்தூர் அருகே பொங்கல் தினத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
லட்சுமணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை அன்று வேலைக்கு செல்லவில்லை. அன்று மதியம் 12 மணியளவில் அவர் மது வாங்குவதற்காக, திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம்-ஆறுமுகநேரி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது வாங்குவதற்காக மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.
அப்போது அங்கு மது வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த காயல்பட்டினம் ஓடக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாஸ்கருக்கும் (43), லட்சுமணனுக்கும் இடையே முதலில் யார் மது வாங்குவது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அவர்கள் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த பாஸ்கர், அங்கு உடைந்து கிடந்த பீர் பாட்டிலை எடுத்து லட்சுமணனின் கழுத்தில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட லட்சுமணனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளரான ஸ்ரீவைகுண்டம் அரசாள்வார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.
பொங்கல் தினத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story