சேலத்தில் சொந்த கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


சேலத்தில் சொந்த கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 16 Jan 2020 11:15 PM GMT (Updated: 16 Jan 2020 5:33 PM GMT)

சேலத்தில் சொந்த கிராமத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

எடப்பாடி,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 14-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு வந்தார். அன்றைய தினம் அவர் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன்பிறகு தனது சொந்த கிராமத்தில் பொங்கல் விழாவை கொண்டாட எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு அவருக்கு ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள முருகன் கோவிலுக்கு முதல்-அமைச்சர் சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் மனைவி ராதா மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். பின்னர் கோவில் மைதானத்தில் புதுப்பானையில் முதல்-அமைச்சரின் குடும்பம் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது, பொங்கல் பொங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி, அவரது மனைவி ராதா ஆகியோர் ‘பொங்கலோ, பொங்கல்’ எனக்கூறி பொங்கல் பானைக்கு மாலை அணிவித்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கள பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தினர்.

உறியடி

அதன்பிறகு கோமாதா பூஜையில் பங்கேற்று பசு மாடுகளுக்கு பழங்களையும், தீவனங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது மனைவி ராதாவும் சேர்ந்து சர்க்கரை பொங்கல் வழங்கினர். இதையடுத்து முருகன் கோவில் மைதானத்தில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, பூக்களால் நிரப்பப்பட்ட உறி பானையினை கம்பால் அடித்து உடைத்தார். அதன்பிறகு அங்கு கலை நிகழ்ச்சி குழுவினரின் மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை முதல்-அமைச்சர் ரசித்து பார்த்தார். பின்னர் அவர், ஊர் மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். ஊர் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடியதால் அவரது சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story