மாமல்லபுரம் அருகே, பொங்கல் விழாவில் வெளிநாட்டு பயணிகள் பங்கேற்பு
மாமல்லபுரம் அருகே நடந்த பொங்கல் விழாவில் வெளி நாட்டு பயணிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்,
ஆண்டுதோறும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கலை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி கிராமத்தில் நடந்தது. வெளிநாட்டு பயணிகள் 100 பேர் விழா நடக்கும் வடகடம்பாடி கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழக கலாசாரப்படி வடகடம்பாடி கிராம எல்லையில் வெளிநாட்டினருக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில், மாமலல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், செங்கல்பட்டு மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், மாமல்லபுரம் திட்டக்குழு உறுப்பினர் கணேசன் முன்னிலையில் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, சுற்றுலாத்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெளிநாட்டினரை மகிழ்விக்க கரகம், காவடியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கிராமிய, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் வெளிநாட்டு பயணிகள் சிலர் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து தலையில் கரகம் வைத்து ஆடி கிராமிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் வெளிநாட்டு பயணிகள் சிலர் அங்குள்ள வயல் வெளிகளில் இறங்கி மாவட்ட கலெக்டருடன் இணைந்து ஏர் ஓட்டியும் மகிழ்ந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்து கிராமத்தின் அழகை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு கயிறு இழுக்கும்போட்டி, உறியடித்தல், இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு சுற்றுலாத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை உணர்த்தும் வகையில் வேட்டி அணிந்து கலந்து கொண்டது பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.
விழாவில் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா, சாய்கிருஷ்ணன், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ஜி.ராகவன், முன்னாள் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பி.ஏ.எஸ்வந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொங்கல் விழாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஆலந்து, கனடா, பெல்ஜியம், சுவீஸ், டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பயணிகள் பங்கேற்றனர். விழாவின் முடிவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கரும்பு, பொங்கல் வழங்கப்பட்டது. அதை வாங்கி அவர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story