தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது - காதர்முகைதீன் பேட்டி


தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது - காதர்முகைதீன் பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2020 4:15 AM IST (Updated: 17 Jan 2020 12:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார். இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை, 

குடியுரிமை திருத்த சட்டம் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது. டெல்லியில் எங்கள் கட்சியில் அகில இந்திய தேசிய நிர்வாக குழு கூட்டம் 3 நாட்கள் நடந்தது. அந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற சட்டங்களால் மதவாத பிரிவினையை மத்திய அரசு ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு இந்து ராஷ்டிரியத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. இதுபோன்ற சட்டங்களால் இந்தியாவில் வன்முறையை மத்திய அரசு தூண்டிவிடுகிறது. டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அங்கு ஒரு சில இடங்களில் 24 மணி நேர போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க நினைக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

அப்பாவி மக்களை போலீசார் கொன்று குவித்து வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் 21 பேரும், அசாம் மாநிலத்தில் 5 பேரும், கர்நாடக மாநிலத்தில் 2 பேரும் பலியாகி இருக்கிறார்கள். இவர்கள் அப்பாவி மக்கள். இது மனித உரிமை மீறல் ஆகும். இந்த படுகொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் கட்சி சார்பில் மனித உரிமை ஆணைய நீதிபதியை சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை. பா.ஜனதா கட்சி ஆளும் சில மாநிலங்களில் இந்த சட்டம் அமல்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருகிறார்கள்.

இந்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. சில முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருந்தால், இந்த சட்டம் அமல்படுத்தி இருக்க முடியாது.

குடியுரிமை திருத்த சட்டத்தில் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுக்கிறது. இந்த சட்டம் பொதுமக்களுக்கு எதிரானது என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் மாநாடு நடத்தி வருகிறோம்.

நாளை (சனிக்கிழமை) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு எங்கள் கட்சி சார்பில் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

மேலப்பாளையத்தில் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள். அவர் ஆன்மிகவாதி, சிறந்த பேச்சாளர். நெல்லை கண்ணன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து காதர்முகைதீன், நெல்லை டவுனில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மீரான் முகைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, தென்மண்டல இளைஞர் அணி செயலாளர் கடாபி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story