மாவட்ட செய்திகள்

நெல்லையில், சுற்றுச்சுவர் தகராறில் பயங்கரம்: தந்தை-மகள் அடித்துக்கொலை - 3 பேர் கைது + "||" + Tirunelveli, Terror in the round wall dispute Father-daughter slaughter - 3 arrested

நெல்லையில், சுற்றுச்சுவர் தகராறில் பயங்கரம்: தந்தை-மகள் அடித்துக்கொலை - 3 பேர் கைது

நெல்லையில், சுற்றுச்சுவர் தகராறில் பயங்கரம்: தந்தை-மகள் அடித்துக்கொலை - 3 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் சுற்றுச்சுவர் தகராறில் தந்தை-மகள் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, 

நெல்லை மேலப்பாளையம் வேடுவர் காலனியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 55). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ் (62) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதுசம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தங்கமுத்துவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயராஜ் தரப்பில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கமுத்து, அந்த இடத்தில் சுற்றுச்சுவரில் வெள்ளையடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஜெயராஜ், அவருடைய மகன்கள் ஞானராஜ் என்ற ராஜ்குமார் (28), பூபதி என்ற அந்தோணிராஜ் (27) ஆகியோர் வந்தனர். கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது, சுற்றுச்சுவரில் ஏன் வெள்ளையடித்தீர்கள் என்று கேட்டனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ், அவருடைய மகன்கள் ராஜ்குமார், அந்தோணிராஜ் ஆகியோர் சேர்ந்து தங்கமுத்துவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். மேலும், கீழே கிடந்த பனை மட்டையை எடுத்து தாக்கினர்.

இதை பார்த்த தங்கமுத்துவின் மகள் சுமதி (31) பதறியடித்தபடி ஓடி வந்து தடுத்தார். அவரையும் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த தங்கமுத்து, சுமதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

அப்போது ஊர் மக்கள் திரண்டு, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் பெரியசாமி, மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இடத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராஜ், அவருடைய மகன்கள் ராஜ்குமார், அந்தோணிராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சுற்றுச்சுவரில் வெள்ளையடித்ததால் கொலை செய்தோம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து இரும்பு கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தங்கமுத்துவின் மனைவி சூரியசந்திராவுக்கு ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-ம், சுமதியின் கணவர் ஆறுமுகத்துக்கு ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-ம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிதியை பாளையங்கோட்டை தாசில்தார் தாஷ்பிரியன் வழங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...