அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளத்தில் மாட்டு பொங்கலையொட்டி மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்


அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளத்தில் மாட்டு பொங்கலையொட்டி மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jan 2020 4:15 AM IST (Updated: 17 Jan 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு பொங்கலையொட்டி அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.

நாகப்பட்டினம்,

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழர்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சூரிய உதயத்தின்போது வீட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடு செய்தனர். அதைதொடர்ந்து நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஆண்டு முழுவதும் மனிதனுக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக இந்தநாள் கொண்டாடப் படுகிறது.

மாட்டு பொங்கலையொட்டி தமிழர்கள் தங்களது முன்னோர் களுக்கு மீன், இறைச்சி, பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவது வழக்கம்.

அலைமோதிய கூட்டம்

இதற்காக நாகையில் மீன், இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. அதேபோல் நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீன் இறங்குதளத்தில் மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். மாட்டு பொங்கலையொட்டி மீன்களின் விலை அதிகமாக இருந்தது.

இருப்பினும் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி சென்றனர். அதேபோல் பெரிய கடைத்தெரு, பாரதி மார்க்கெட், காடம்பாடி, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி, மீன்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. அதைதொடர்ந்து மாலையில் கால்நடைகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி, மாலை அணிவித்து, மாவிலை, கரும்பு உள்ளிட்டவைகளை கழுத்தில் கட்டி பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். 

Next Story