“காங்கிரஸ் குறித்து துரைமுருகன் கூறியது ஏற்புடையதல்ல” - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி


“காங்கிரஸ் குறித்து துரைமுருகன் கூறியது ஏற்புடையதல்ல” - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2020 10:45 PM GMT (Updated: 16 Jan 2020 8:06 PM GMT)

“காங்கிரஸ் குறித்து துரைமுருகன் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்ல” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர், 

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கான இடப்பங்கீடு தொடர்பாக தொண்டர்களின் வருத்தத்தை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இதனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சினை ஏதும் இல்லை. தேர்தல் முடிந்த பின்பு தான் அவர் இந்த கருத்தை கூறினாரே தவிர தேர்தலின்போது ஏதும் சொல்லவில்லை. விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு முறையாக இடப்பங்கீடு தரப்படவில்லை.

காங்கிரஸ் குறித்து தி.மு.க. மூத்த தலைவரான துரைமுருகன் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்ல. வேலூர் நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசை சேர்ந்த வாலாஜா உசேன் போட்டியிடுவதை தடுக்க துரைமுருகன் காங்கிரசிடம் அணுகியது தொடர்பாக அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கூடாது என்ற எண்ணத்தில் சிலர் செயல்படுகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி இல்லாதபோது கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கினங்க நாடாளுமன்ற மேலவை தேர்தலில் காங்கிரஸ் கனிமொழிக்கு ஆதரவளித்தது. கூட்டணியில் பரஸ்பர ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் தேவை.

உள்ளாட்சி தேர்தல் பிரச்சினைக்காக தேசிய பிரச்சினையான குடியுரிமை பதிவேடுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை கூட்டிய கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்தது வருத்தமளிக்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் ஏதும் தெரிவிக்கவில்லை. காங்கிரசின் பலம் எங்களுக்கு தெரியும். கூட்டணி அமைப்பதே பரஸ்பர ஒருங்கிணைப்பின் மூலம் வெற்றி பெறுவதற்குதான்.

உள்துறை மந்திரி அமித்ஷாவை பொறுத்தமட்டில் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். தேசிய குடியுரிமை பதிவேட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து உணராமல் அவர் நினைத்ததை செய்ய எண்ணுகிறார். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட 5 பேர் எடுக்கும் முடிவே செயல்வடிவம் பெறுகிறது. மூத்த மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர். தமிழக ஆடிட்டர் ஒருவரின் பரிந்துரையால் பிரதமர் மோடி எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.

பா.ஜனதா அரசு தமிழகத்தை குறிப்பாக தென்மாவட்டங்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பிரதமரிடம் நல்ல பெயர் எடுக்க போட்டியிடுகிறார்களே தவிர தமிழக நலனுக்காக போராடுவதில்லை. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பின்தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்துக்கு மத்திய அரசு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மதுரை-தூத்துக்குடி ரெயில் பாதை, மதுரை-நாகர்கோவில் இருவழி ரெயில் பாதை திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இயக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுக தேர்தலின்போது சாத்தூர், ராஜபாளையம், நரிக்குடி, வத்திராயிருப்பு ஆகிய 4 யூனியன்களில் தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி இதற்கு காரணமான அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story