குஜிலியம்பாறை அருகே, போலி மதுபானம் தயாரித்த தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது - 1,160 பாட்டில்கள் பறிமுதல்
குஜிலியம்பாறை அருகே, போலி மதுபானம் தயாரித்த தந்தை-மகன் உள்பட 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1,160 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
குஜிலியம்பாறை,
கரூர் மாவட்டம் அருகம்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 65). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குஜிலியம்பாறை அருகே உள்ள பல்லாநத்தம் கடகால்புதூரில் 4 ஏக்கர் நிலம் வாங்கினார். பின்னர் அந்த இடத்தின் ஒரு பகுதியில் வீடுகட்டி வசித்தார். மீதமுள்ள இடத்தில் தேங்காய், கொய்யா, முருங்கை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக கரூர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து பிச்சைமுத்து தனது தோட்டத்தில் போலி மதுபானம் தயாரிப்பதாகவும், அதனை அவருடைய மகன் சிவா (32) மூலம் வாகனத்தில் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மதுவிலக்கு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இளவரசன் ஆகியோர் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாவூத்உசேன் மற்றும் போலீசார் பிச்சைமுத்துவின் வீடு, தோட்டத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவருடைய தோட்டம், வீட்டில் 29 அட்டைப்பெட்டிகளில் 1,160 போலி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அத்துடன் போலி மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும், காலி மதுபான பாட்டில்களும் அங்கு மூட்டை, மூட்டையாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலி மதுபானம் தயாரித்ததாக பிச்சைமுத்து, அவருடைய மகன் சிவா, இவர்களின் கூட்டாளியான கரூரை சேர்ந்த சுரேஷ் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிவா, மைக்செட் தொழில் செய்து வந்ததும், அதற்கான பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தில் போலி மதுபானங்களை மறைத்து வைத்து கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story