தர்மபுரி மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்


தர்மபுரி மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2020 4:30 AM IST (Updated: 17 Jan 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தர்மபுரி,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வீடுகள்தோறும் பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து, புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பொங்கலோ, பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி வழிபாடு நடத்தினார்கள்.

இதனிடையே நேற்று மாட்டுப்பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் குளிக்க வைத்து அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டினார்கள். பின்னர் கால்நடைகளுக்கு வண்ண, வண்ண கலர் பொடிகள் பூசியும், பலூன்கள், புது கயிறுகள் கட்டியும் அலங்கரித்தனர்.

சிறப்பு வழிபாடு

ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் வீடுகளில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது படைக்கப்பட்ட பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை மாடுகளுக்கு வழங்கினார்கள். பெரும்பாலான கிராமங்களில் பொதுமக்கள் பொது இடத்தில் கூடி அங்குள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுப்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே ஏராளமான பெண்கள் ஒன்றுகூடி ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கிராமமக்களின் ஒற்றுமைக்காக வழிபாடு நடத்தினார்கள். பின்னர் விவசாய தொழிலுக்கு உதவியாக விளங்கும் மாடுகளை பொங்கல் வைத்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி அவற்றை சுற்றி வந்து வழிபட்டனர்.

மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழர்களின் வீர விளையாட்டான கபடி போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டுப்பொங்கல் விழாவின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க விழா நடைபெற்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story